திங்கள், 5 ஜனவரி, 2015

எங்கே இருக்கிறது, சேவை?

தேசிய நெடுஞ்சாலைகளில், முக்கிய சாலை சந்திப்புகளில், அவசர உதவிக்கென்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விபத்துக்களில் சிக்குவோரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி, உயிர் பிழைக்க வைப்பதற்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது மிக மிகத்தவறு.
இந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம், தனியார் மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் எந்திரங்கள். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அளிக்கக்கூடிய மலைப்பகுதியை, ‘கேட்ச்மெண்ட் ஏரியா’ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதி என்பார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக கொட்டித்தரும் நோயாளிகளை அளிக்கக்கூடிய ‘கேட்ச்மெண்ட் ஏரியா’வாக, இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மக்களுக்கு சேவை செய்வதாக, தனியார் மருத்துவமனைகள் போடும் வேஷத்துக்கு வசதியாகவே, இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப் படுகிறது. ‘சேவை’யை அனுபவித்தவர்களுக்குத்தான், அதன் சிரமம் புரியும்.
சாலைகளில் விபத்து நடந்து விட்டால், இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புயல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ‘ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இவர்களுக்கு எத்தனை அக்கறை’ என்று மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்கும், அவர்கள் வேகம். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அடிபட்டவரை தங்களிடம் கொண்டு வரும் ஒவ்வொரு டிரைவருக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் வரை, கோவை மருத்துவமனைகள் கமிஷன் தருகின்றன.
அடிபட்டவரை, சிகிச்சைக்கு அட்மிஷன் போட்டவுடனேயே, டிரைவர் கையில் பணம் தரப்பட்டு விடுகிறது. ஆகவே, சாலையில் எங்கு விபத்து நேரிட்டாலும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பறந்தடித்துக் கொண்டு வருவதும், ‘எந்த மருத்துவமனைக்கு போகலாம்’ என்று அடிபட்டவருக்கும், உடன் இருப்பவருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்குவதும், அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த மோசடிகளுக்கு இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் துணைபோவதாக புகார்கள் வரத் தொடங்கி விட்டன.
அடிபட்டவர் அல்லது உடன் இருப்பவர், எந்த மருத்துவமனை போகச்சொல்கிறாரோ, அங்கு செல்ல வேண்டியதுதான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால், தனியார் மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தகைய நோக்கத்துடன் நடந்து கொள்வதில்லை. அடிபட்டவரிடம் இருந்து, தங்களுக்கோ, கமிஷன் தரும் மருத்துவமனைக்கோ, எதுவும் தேறாது என்று உறுதிப்படுத்திக் கொண்டபிறகே, அரசு மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது.
எனது உறவினர் ஒருவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அருகேயிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. வந்ததும், அந்த டிரைவர், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு போகலாம் என்கிறார். உறவினரோ, வேறு ஒரு மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார். டிரைவரோ, ‘நான் அந்த மருத்துவமனைக்குத்தான் போவேன்’ என்று குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறியிருக்கிறார்.
‘அந்த மருத்துவமனைக்கு வந்து, ஒரே நிமிடம் இருந்து, வேறு மருத்துவமனைக்குப் போகிறேன் என்று கூறி விட்டுப் போய் விடுங்கள்’ என்கிறார், டிரைவர். காலில் எலும்பு முறிவுடன் துடித்துக் கொண்டிருந்த உறவினரோ, எரிச்சலாகி, ‘வேறு வண்டியை பிடியுங்கள்’ என்று கூறி விட்டார். அதன்பிறகுதான், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வழிக்கு வந்தார். இது, மூன்றாண்டுக்கு முன் கோவையில் நடந்த சம்பவம். இப்போது, இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மருத்துவமனைகள் தரும் கமிஷன் தவிர, வேறென்னவாக இருந்து விட முடியும்?
‘இந்த கொள்ளையர்களும் இல்லாவிட்டால், விபத்தில் படுகாயமுற்று, சுய நினைவிழந்து கிடப்பவர்களை, காப்பதற்கு வேறு நாதியில்லை’ என்பதாலேயே, இவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்?

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

‘வசூல்’ வாரியம்!

பணியிட மாறுதலில் வெளியூர் சென்றபோது, ஏழாண்டுகள் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. அடி முதல் முடி வரை, ஊழல் புரையோடியிருக்கும் அரசுத்துறைகளில் முக்கியமானது வீட்டு வசதி வாரியம்.
அங்கு கோப்பு எதுவும், வைத்த இடத்தில் இருக்காது; கேட்ட நேரத்திலும் கிடைக்காது. ஒதுக்கீடெல்லாம், கடவுளே நினைத்தாலும் காசு தராமல் வாங்கி விட முடியாது. அலுவலகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம், குப்பை போல் கோப்புகள் கிடக்கும். குப்பை மலைகளுக்குள் ஆங்காங்கே பதுங்கிக் கொண்டு ஊழல் பெருச்சாளிகள் வேலை பார்க்கும். ஒரு அலுவலகத்துக்கு ஓரிருவர் நல்லவர் இருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்காமலே நல்லவர்களாக இருந்து தொலைப்பர்.
நான் அங்கு குடிபோனபோது, அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் கேட்ட முதல் கேள்வி, ‘அலாட்மென்ட் ஆர்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்க’ என்பதுதான். ‘நான் அரசு ஊழியர் அல்ல; பத்திரிகையாளர்’ என்பதைக் காட்டிலும், ‘லஞ்சம் கொடுக்காமல் அலாட்மென்ட் வாங்கிவிட்டேன்’ என்பதுதான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
‘எங்கிட்டயே பத்தாயிரம் வாங்கிட்டான்’ என்றார், ஒரு வருவாய் ஆய்வாளர். ‘நான் அஞ்சாயிரம் கொடுத்துத்தான் ஆர்டர் வாங்கினேன்’ என்றார், ஒரு ஆசிரியர். பி.டி.ஓ., ஒருவரும், அவர்கள் இருவரையும் வழிமொழிந்தார்.
இவர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என அரசுத்துறைகளில் ஊறியவர்கள். அவர்களையே, பல முறை இழுத்தடித்து, பல ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டுதான், ‘அலாட்மென்ட் ஆர்டர்’ தரப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு வீட்டு வசதி வாரியத்தில் லஞ்சம் விளையாடும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
லஞ்சம் தராமல், வீடு அலாட்மென்ட், கீ ஆர்டர் எதுவும் வாங்க முடியாது. கேட்டால், ‘சீனியாரிட்டி லிஸ்ட் இருக்குது சார், அதன்படி தான் தர முடியும். எங்க வேணும்னாலும் சொல்லுங்க’ என்பார்கள். ‘கலெக்டரே சொன்னாலும் காரியம் நடக்காது; காசு கொடுத்தால் கைமேல் ஆர்டர் கிடைத்து விடும்’ என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்.
அரசு ஊழியர் அல்லாதவர்கள், வீட்டு வாடகையை, கருவூல சலான் பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு வசதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் சலான்களை, போட்டோ காப்பி எடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரிஜினல் சலானை, நாம் பைல் செய்து வைத்துக்கொள்வது முக்கியம்.
திடீர் திடீரென, ‘நீங்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை’ என்று கடிதமோ, போன் அழைப்போ வந்து விடும். நமக்கு வந்தால் பரவாயில்லை. அலுவலகத்துக்கு போனால் இன்னும் சிக்கல். ஆகவே, சலான் ஒரிஜினலை பத்திரமாக பைலில் வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கேட்கும்போது, அதையும் போட்டோ காப்பி எடுத்து அனுப்பி விட வேண்டும்.
தீபாவளி பொங்கல் வரும்போது, சம்பந்தப்பட்ட செக்ஷன் ஊழியர் மகிழும் வண்ணம் ‘கவனித்து’ வைப்பது முக்கியம். இல்லையெனில், அவர்பாட்டுக்கு, ‘உங்கள் ஊழியர், வாடகை செலுத்தவில்லை’ என்று அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி விடுவார். அப்புறம், அக்னிப்பிரவேசம் செய்தாலும்கூட, நாம் யோக்கியர் என்பதை அலுவலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். இந்த இம்சைக்கு பயந்தே, என் சக ஊழியர் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தார், தீபாவளிக்கு வெளியிடும் ஸ்வீட் கூப்பனை, வீட்டு வசதி வாரிய ஊழியருக்கு தபாலில் அனுப்பி வைப்பார்.
ஐந்தாறு இந்தியன் தாத்தாக்கள் அவதரித்து, தொடுவர்மம், தொடாவர்ம வித்தையெல்லாம் சரமாரியாக காட்டினால்தான், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத்துறைகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே, ஏழாண்டு அனுபவத்தில் நான் தெளிந்த உண்மை.

சனி, 3 ஜனவரி, 2015

மின் அலுவலகத்தில் ‘ஷாக்!’

கடைசி நாளில் கட்டணம் செலுத்தும் சராசரி இந்தியர்களின் வழக்கப்படி, மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். நான்கைந்து வரிசைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பத்திரிகை செய்தியாளர் என்கிற தோரணையில், நேரே அதிகாரியை சந்தித்து, ஓரிரு வினாடிகளில் கட்டணம் செலுத்தி விடுவதற்கு, கொஞ்சம் திறமையும், நிறைய கொழுப்பும் வேண்டும். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாதென்பதால், ‘ஆனது ஆகட்டும்’ என வரிசையில் நின்று கொண்டேன்.
இப்படி காத்திருப்பதற்கு காரணம் இருக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையிலும், வரிசைகளில் காத்திருப்போர் உலகம் தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். பஸ்சுக்கு, ரயிலுக்கு, விமான நிலைய பரிசோதனைக்கு, சினிமா டிக்கெட் வாங்குவதற்கு, வங்கிகளில், அரசின் பிற அலுவலகங்களில் என வரிசைகளும், காத்திருக்கும் மனிதர்களும் வேறுபடுவரே தவிர, அவர்களின் குணாதிசயங்களும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்.
கட்டணம் வசூலிக்கும் நபர்களை, அவர்கள் பணியை, தங்கள் சொந்தக்கதையை, கிரிக்கெட்டை, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் பேசியபடி நின்றிருக்கும் மனிதர்களின் சுவாரஸ்யம் அத்தகையது. நமக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா? ஆகவே, எங்கு சென்றாலும், வரிசை என்று வந்து விட்டால், புறமுதுகிட்டு ஓடாமல், விழுப்புண் விரும்பும் வீரனைப்போல், எதிர்கொண்டு சந்திப்பதே நம் தலையாய இயல்பு.
அப்படி சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்து, அக்கம் பக்கத்தில் நின்றவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் கேட்டபிறகு, எனது முறை வந்தது. கட்டண அட்டையுடன், பணத்தையும் நீட்டினேன்.
கட்டணம் வசூலிக்கும் அலுவலர், அட்டையை, திருப்பித்திருப்பி பார்த்தார்.
‘‘கடைசியாக எப்ப கரண்ட் பில் கட்டுனீங்க’’
என்னைப்பார்த்து கேட்டார்.
‘‘ரெண்டு மாசம் இருக்கும்,’’ என்றேன், நான்.
‘‘இல்ல, இந்த மாசத்துக்கு பில் கட்டுனீங்களா’’
‘‘இன்னிக்குத்தான லாஸ்ட் டேட், அதான் வந்துட்டனே’’
‘‘இல்லியே, இந்த நம்பருக்கு பில் கட்டியாச்சே’’
எனக்கு அதிர்ச்சி
‘‘சார், நம்பர நல்லா செக் பண்ணுங்க,’’ என்றேன்.
‘‘எல்லாம் பண்ணியாச்சு. இந்த நம்பருக்கு பில் கட்டீருக்கு’’
‘‘நான் கட்டவே இல்லியே’’
‘‘வீட்டுல வேற யாராச்சும் கட்டிருப்பாங்களா’’
‘‘இல்லியே, எங்க வீட்டுல ஊர்ல இருக்காங்ளே’’
‘‘சரி, நானெதுவும் பண்ண முடியாது. இந்தாங்க,’’ என்று, அட்டையுடன், பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
’’நல்லாப்பாருங்க, அப்புறம் கட்டலைன்னு சொல்லி, பீஸ் கேரியர புடுங்குறேன்னு வரக்கூடாதுங்க’’
‘‘சார், இது உங்க அட்டைதானே’’
‘‘ஆமா, எங்களுதுதான்’’
‘‘அப்படின்னா, இந்த அட்டைக்கு கரண்ட் பில் கட்டியாச்சு. நான் வேணும்னா அட்டைல என்ட்ரி போட்டுத்தாரேன்’’
சொன்னபடி என்ட்ரியும் போட்டுக்கொடுத்து விட்டார்.
எனக்கு அதிர்ச்சி குறைந்தபாடில்லை.
‘யார் கட்டியிருப்பார்’ என்று, யோசனையாக இருந்தேன்.
எனக்குப்பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது.
‘‘சார், யாராச்சும் பணம் கட்டுனத, நம்பர் மாத்தி, உங்க நம்பருக்கு கட்டுனதா என்ட்ரி போட்டுருப்பாங்க, இவுங்க வேலைபாக்குற லட்சணம் தெரியாதா,’’ என்றார், ஒருவர்
இன்னொருவர், ‘அதான் என்ட்ரி போட்டுட்டாங்களே, தைரியமா போங்க சார்’ என்றார்.
வீட்டுக்கு சென்றபிறகும், குழப்பம் தீரவில்லை.
‘எதற்கும் கேட்டு வைப்போம்’ என்று ஊரில் இருக்கும் மனைவிக்கு போன் போட்டேன்.
‘‘கரண்ட் பில் ஏதாச்சும் கட்னியா’’
‘‘இல்லியே, அதெல்லா உங்கு டிபார்ட்மென்ட் தான’’
‘‘இல்ல, கரண்டுபில் கட்டப்போனா, அங்க இந்த நம்பர் ஏற்கனவே பில் கட்டியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதான் குழப்பமா இருக்கு’’
‘‘நல்லப்பாத்திங்ளா, நம்மு நெம்பர்தானா’’
‘‘எல்லாம் செக் பண்ணியாச்சு, நம்மு நெம்பர்தான்னு சொல்லிட்டாங்க’’
‘‘செரி, பணம் மிச்சம்னு நெனைங்க’’
அதன்பிறகு, நானும் அதை மறந்து விட்டேன். அக்கம் பக்கத்து வீடுகளில் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களை பகல் நேரத்தில் சந்திப்பது அரிது. ஆகவே யாருடனும் அதைப்பற்றி பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, கீழ் தளத்து வீட்டில் ஏதோ கலவரம் நடப்பது போன்று சத்தம் கேட்டது. என் மனைவி போய்ப்பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டே வந்தார்.
‘‘கரண்ட் பில் யாரோ கட்டிட்டாங்கன்னு சொன்னீங்களே, அது வாத்யார் சம்சாரம்தான். நம்பர் தெரியாம மாத்திச் சொல்லி பில் கட்டிருச்சாமா, பணம் கட்டுலன்னு சொல்லி, அவங்க வீட்டுல பீஸ் கேரியரை கழட்டீட்டு போய்ட்டாங்க’’
அபராதத்தை கட்டி, பீஸ் கேரியரை மீட்டு வந்தார், ஆசிரியர்.
நானும், என் மனைவியும், ஆசிரியரை சந்தித்து, நடந்த விவரத்தைக்கூறி, கட்டணத்தை கொடுத்து விட்டோம்.
ஆசிரியரின் மனைவி, ‘நான் நாலஞ்சு மாசமா, அந்த நம்பர்லதான் கரண்ட் பில் கட்றதா ஞாபகம்’ என்று கூற, எனக்குப் பகீரென்றது; பயந்து ஓடி வந்து விட்டோம்.